சிறுநீரக கற்களை கரைக்கும் வாழைத்தண்டு பொரியல்

வாரம் ஒருமுறை வாழைத்தண்டு சாப்பிடுவது மிகவும் நல்லது. அதிலும் அதனை சாறு எடுத்து குடித்தால், சிறுநீரக கற்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம். ஒருவேளை உங்களுக்கு வாழைத்தண்டு சாறு குடிக்க பிடிக்காவிட்டால், அதனை பொரியல் போன்று செய்து சாப்பிடலாம். அதிலும் வாழைத்தண்டு பொரியலானது புளிக்குழம்புடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும். சரி, இப்போது அந்த வாழைத்தண்டு பொரியலை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்: வாழைத்தண்டு – 1 (சிறியது) வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது) துருவிய தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன் பாசிப்பருப்பு – 1 1/2 டேபிள் ஸ்பூன் மோர் – 1/4 கப் மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு தாளிப்பதற்கு… எண்ணெய் – 2 டீஸ்பூன் கடுகு – 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது பச்சை மிளகாய் – 2 (நீளமாக கீறியது) செய்முறை: முதலில் வாழைத்தண்டில் உள்ள நாரை நீக்கி, அதனை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை மோரில் போட்டு, சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். பின்பு பாசிப்பருப்பை நீரில் போட்டு 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும். பின் வெங்காயம் மற்றும் பாசிப்பருப்பை சேர்த்து 3 நிமிடம் வதக்கி விட வேண்டும். அதற்குள் மோரில் ஊற வைத்துள்ள வாழைத்தண்டை தனியாக வடித்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து அதில் வாழைத்தண்டு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, மூடி வைத்து வாழைத்தண்டை வேக வைக்க வேண்டும். வாழைத்தண்டானது நன்கு வெந்து அதில் உள்ள நீர் வற்றியதும், அதில் துருவிய தேங்காயை சேர்த்து பிரட்டி இறக்கினால், வாழைத்தண்டு பொரியல் ரெடி!!!

Leave a Reply