உருளைக்கிழங்கு குடைமிளகாய் வறுவல்

குளிர்காலமானது ஆரம்பமாகிவிட்டது. இப்போது மார்கெட்டில் எண்ணற்ற குளிர்கால காய்கறிகளானது விலை குறைவில் கிடைக்கும். அதிவ் கேரட், முள்ளங்கி, குடைமிளகாய், பச்சை பட்டாணி, பீட்ரூட், காலிஃப்ளவர், முட்டைக்கோஸ் போன்றவை குறிப்பிடத்தக்கவை.
இந்த காய்கறிகளை குளிர்காலத்தில் சற்று அதிகமாக உட்கொண்டு வந்தால், குளிர்காலத்தின் போது ஏற்படும் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
இங்கு குளிர்கால காய்கறிகளில் ஒன்றான குடைமிளகாயை, அனைவருக்கும் பிடித்த உருளைக்கிழங்குடன் சேர்த்து எப்படி வறுவல் செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வறுவலானது செய்வதற்கு மிகவும் சிம்பிளாக இருக்கும்.
சரி, இப்போது அந்த உருளைக்கிழங்கு குடைமிளகாய் வறுவலை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து அதன்படி வீட்டில் செய்து சுவைத்து மகிழுங்கள்.

தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு – 4 (நறுக்கியது)
குடைமிளகாய் – 3 (நறுக்கியது)
வெங்காயம் – 1 (நறுக்கியது)
தக்காளி – 2 (நறுக்கியது)
பூண்டு – 5 பற்கள் (நறுக்கியது)
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
சீரகப் பொடி – 2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிது (நறுக்கியது)
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் – 1 கப்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் மற்றும் பூண்டு சேர்த்து தாளித்து, பின் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
வெங்காயமானது பொன்னிறமானதும், அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி, உருளைக்கிழங்கு, குடைமிளகாய் சேர்த்து 4-5 நிமிடம் நன்கு வதக்க வேண்டும். பின்பு அதில் தக்காளியை சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி மீணடும் மிதமான தீயில் 4-5 நிமிடம் வதக்க வேண்டும்.
பிறகு அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து குறைவான தீயில் 5-6 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
காய்கறிகளானது நன்கு வெந்துவிட்டால், மூடியைத் திறந்து அதில் கரம் மசாலா சேர்த்து பிரட்டி இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், உருளைக்கிழங்கு குடைமிளகாய் வறுவல் ரெடி!!! இந்த வறுவலானது சப்பாத்தி, பரோட்டா மற்றும் சாதத்திற்கு ஏற்ற சைடு டிஷ்ஷாக இருக்கும்.
குறிப்பு:
* வெங்காயத்தை வதக்கும் போது, அத்துடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக் கொண்டால், வெங்காயம் சீக்கிரம் வெந்துவிடும்.
* உங்களுக்கு வேறு ஏதாவது காய்கறிகள் பிடித்தால், அதையும் இத்துடன் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் இந்த ரெசிபியானது இன்னும் ஆரோக்கியமானதாக இருக்கும்.

Leave a Reply