முருங்கைக் கீரைப் பொடி

தேவையானவை:
கடலைப்பருப்பு – 100 கிராம்
உளுத்தம்பருப்பு – 150 கிராம்
பெருங்காயம் – சிறுதுண்டு
மிளகாய்வற்றல் – 20
முருங்கைக் கீரை – 2 கட்டு
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
வெல்லம் – சிறுதுண்டு
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
தேங்காய்த்துருவல் – ஒன்றரை கப்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்

செய்முறை:
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு பெருங்காயத்தைச் சேர்த்துப் பொரித்து எடுக்கவும். அதே வாணலியில் மிளகாய் வற்றலை வறுத்து எடுக்கவும். கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, தேங்காய்த்துருவல் ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து எடுக்கவும். முருங்கைக் கீரையை நன்கு கழுவி இரண்டு அல்லது மூன்று நாட்கள் நிழலில் நன்கு உலர வைக்கவும். வறுத்துவைத்த பொருட்களுடன் முருங்கைக் கீரை, உப்பு, புளி அனைத்தையும் நன்கு மிக்ஸியில் போட்டு பொடியாக்கவும். கடைசியாக, வெல்லம் சேர்த்து ஒரு சுழற்று சுற்றி பொடியாக்க வேண்டும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகைச் சேர்த்துப் பொரிந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு, இத்துடன் சிறிது மஞ்சள்தூளைச் சேர்க்கவும். அரைத்து வைத்த பொடியுடன் தாளித்ததைச் சேர்த்துக் கலக்கவும்.
இதை இட்லி தோசையுடன் தொட்டு சாப்பிடலாம் மேலும் சாதத்துடன் நெய் சேர்த்து சாப்பிடலாம். கர்ப்பிணி பெண்களுக்கு இது மிகவும் உகந்தது. குழந்தைகளை நேரிடையாக கீரை சாப்பிட வைப்பதை விட இந்த வழி உகந்தது. இதில் முருங்கைக்கீரைக்கு பதில் நீங்கள் விரும்பும் எந்தக் கீரையையும் சேர்க்கலாம்.
சிறுநீரகம், சுவாசக் கோளாறு, ஹீமோகுளோபின் குறைபாடு உள்ளவர்கள் இந்தப் பொடியை வாரத்தில் இரண்டு நாட்கள் கட்டாயம் உண்டு வந்தால், பிரச்னைகள் தீர்ந்து உடல் சூடு தணியும். இந்தப் பொடியை அரைத்து டப்பாவில் காற்றுப் புகாமல் வைத்துக்கொண்டால் 10 நாட்கள் வரை தாங்கும்.

Leave a Reply