வீட்டை அழகாக்க எத்தனையோ வழியிருக்கு

நம் எல்லோரையுமே திரும்பிப்பார்க்க வைக்கும் ஒரே விஷயம் அழகுதான். எவ்வளவுதான் பழக்கப்பட்ட நபராக இருந்தாலும் கூட அவருடைய அழகான உடையோ அல்லது விசேஷமான அம்சங்களோ நம்மை திரும்பிப்பார்க்க வைக்கின்றன. இதனால் தான் நாமும் அழகுடன் வலம் வரவிரும்புகின்றோம். அதே போல நம்முடைய வாகனம், வீடு உள்ளிட்டவற்றையும் அழகுபடுத்த முயற்சிக்கின்றோம். இந்த முயற்சியில் வீடு அழகு படுத்தல் என்பது உண்மையிலேயே ஓர் கலையே. சிலர் வீட்டை மாதத்துக்கு ஒரு முறை மாற்றியமைப்பார்கள்.

வீட்டை அலங்கரிப்பது என்பது தனி கலை. இதற்காக அதிகம் சிரமப்படவேண்டாம். சின்ன சின்ன ரசனையோடு, நமக்கு கிடைக்கும் பொருட்களைக் கொண்டு வீட்டை அலங்கரிக்கலாம். இவ்வாறு செய்தாலே போதும் நமது வீடும்கூட வீட்டை அழகாக்க எத்தனையோ வழியிருக்கு அரண்மனைபோல மாறும்.
உங்கள் வீட்டை அழகாக மாற்ற இதோ சில ஆலோசனைகள்.

மகிழ்ச்சி, புத்துணர்ச்சி தரும் பூக்கள்: வீட்டின் நுழைவு வாயிலின் வலது பக்க மூலையில் வட்டமான பாத்திரத்தில், தண்ணீர் நிரப்பி, அதில் உங்களது வீட்டு தோட்டத்தில் பூக்கும் சிறு பூக்களை அடர்த்தியாய் அழகாக பரப்பி விடவும். இந்த பூக்கள் அலங்காரத்தை பார்க்கும் போதே மனதில் புத்துணர்ச்சி எழும்.

இயற்கை காட்சிகள் : வீட்டின் ஹாலில் நுழைந்தவுடன் கண்ணில்படும் இடத்தில் சுவரில் இயற்கைக் காட்சிகளின் படம் அல்லது குழந்தைகளின் படத்தை மாட்டி வைக்கலாம். இவை பார்த்தவுடன் உற்சாகத்தை தரும். ஹாலின் டீபாய் மீது மடித்து வைத்த பேப்பர்கள், தாமிரத்திலான சிரிக்கும் புத்தர் அல்லது பிள்ளையார் பொம்மை ஒன்றை வைக்கலாம். அல்லது மெழுகுவர்த்தியை ஸ்டாண்டுடன் வைக்கலாம். சின்ன ஷோகேஸ் செய்து ஹால் சுவர் நடுவே அமைத்து அதில் அலங்கார பொருட்களை வைக்கலாம். டீபாய் மேல் சின்னதாய் ஒரு பூ ஜாடி வைத்து நம் வீட்டு தோட்டத்தில் பூத்த பூக்களை அன்றாடம் பறித்து அலங்கரிப்பதும் வீட்டை உயிரோட்டமுள்ளதாக மாற்றும்.

அழகான பெயின்டிங்: எம்ப்ராய்டரி செய்த கர்ச்சிப் துணிகளை ப்ரேம் போட்டு சுவர் அலங்காரமாய் மாட்டலாம். அழகான பெயின்டிங் உள்ள காலண்டர்களை தூக்கிப் போடாமல் ப்ரேம் போட்டு டைனிங் ரூம், ஹாலில் மாட்டலாம். செலவு அதிகம் ஏற்படாது. தரை அழுக்காகாமல் இருக்க வினைல் ஷீட்களை ஒட்டலாம். இதன் மூலம் குறைவான விலையில் நிறைவான அழகை பெறலாம்.

சமையலறை அழகு: சமையலறை அலமாரியில் எவர்சில்வர் டப்பாக்கள் அடுக்குவதை தவிர்த்து, ப்ளாஸ்டிக் டப்பாக்களை ஒரே நிறத்தில் சிறிதும் பெரிதுமாய் வாங்கி அடுக்கி வைக்கலாம். தற்போது இவை மொத்தமாக அனைத்து அளவிலும் ஆன்லைனில் கிடைக்கிறது. இதில் தேவையான சாமான்களை நிரப்பி, அதில் பொருட்களின் பெயரை எழுதி ஒட்டிவையுங்கள். பார்ப்பதற்கு அழகாகவும் தெரியும். சமையலறையில் இருக்கும்போது கணவரையோ, குழந்தையையோ எடுத்துதர சொன்னால் கூட சிரமமின்றி எடுத்து தருவார்கள். கிரைண்டருக்குக் கீழே புஷ் கொடுத்து விட்டால் அதை டேபிளின் கீழே இழுத்துத் தள்ளி விடலாம்.

டைனிங் டேபிள் மீது சின்ன ப்ளவர் வேஸோ, அல்லது கட்லரி செட்டோ விருப்பப்படி ஒழுங்காய் அமைக்கலாம். டேபிளும் மடிக்கும் விதமாயிருந்தால் வசதியாய் இருக்கும். இடத்தை அடைக்காது. பூஜை அறைக்கு என்று இடம் இல்லாதவர்கள் சமையலறையின் வடகிழக்கு மூலைச் சுவரில் சிறு அலமாரி செய்து மணி அமைத்த தேக்குக்கதவோடு பூஜைக்கான இடம் அமைக்கலாம்.

படுக்கையறை அழகு: படுக்கை அறையின் அழகை கெடுப்பது ஒழுங்காக வைக்கப்படாத தலையணை, போர்வைகள்தான். இன்பில்ட்காட் என்னும் மேற்புறம் திறந்தால் உள்ளே அதிக இடம் கொண்ட கட்டில்களை படுக்கை அறையில் போட்டு விட்டால் அதிகப்படியான தலையணை போர்வைகளை அதில் வைத்துக்கொள்ளலாம். இடத்தையும் அடைக்காது. வீட்டில் கூடுமான வரையில் தரையில் எந்தப் பொருளையும் வைக்காமல் இருந்தால் அதுவே தனி அழகுதான்.

Leave a Reply