மொட்டை மாடியில் துவங்குது ஆரோக்கியம்

உடலின் ஆரோக்கியம் நாம் உண்ணும் உணவில் இருக்கிறது என்றால் அதை நாம் ஒவ்வொருவரும் வீட்டின் மொட்டை மாடியிலிருந்தே துவங்கலாம் என்கிறார் விஜயகுமார். கல்வி மற்றும் சமூக சேவைக்காக 21 விருதுகளை பெற்றவர். லண்டனில் தொழிற் கல்வி பயின்றவர். தீவிர இயற்கை விவசாயி.

குமாரபாளையம் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் எனபன் முகங்களை கொண்டவர். இயற்கைக்கு எதிரான ரசாயனங்களை கொட்டி விளைவிக்கப்படும் காய்கறிகள், பழங்கள், கீரைகளால் உடல் ஆரோக்கியம் கெடும்என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இருந்தாலும் இயற்கை உரத்தை பயன்படுத்தி விளைவிக்கப்படும் காய்கறிகள் கிடைப்பது அரிது.

அப்படியே கிடைத்தாலும் அது இயற்கை உரத்தில் விளைந்தது தானா என்ற ஐயம் வேறு. சொந்தமாக காய்கறி, கீரைகளை பயிரிட்டுக் கொள்ள போதிய இடவசதி இல்லாததால், கெடுதல் என்று தெரிந்தே ரசாயனத்தில் விளைந்த காய்கறிகளை வாங்கி வயிற்றை நிரப்புகிறோம். ஆரோக்கியமான உணவை நாம் அலைந்து தேடவேண்டியதில்லை. ஒவ்வொருவரின் வீட்டு மொட்டை மாடியிலிருந்தே ஆரோக்கியத்தை துவங்க முடியுமென நம்பிக்கையூட்டுகிறார் விஜயகுமார்.

கட்டிடங்களுக்கு வண்ணம் தீட்ட வாங்கிய பெயிண்ட் பக்கெட், சிமெண்ட் தொட்டி, உரச்சாக்கு, பாலித்தீன் கவர்கள், இத்தோடு காய்ந்து போன மாட்டு சாணம், கொஞ்சம் மண் இது போதுங்க இயற்கை விவசாயத்திற்கு. வீட்டின் மொட்டை மாடி தான் நம்ம முதல் டார்கெட். மண்ணில் காய்ந்த சாணத்தை கலந்து பக்கெட்டுகளில் போட்டு தேவையான விதையை ஊன்றி தண்ணீர் விட்டால்போதும்.

ஒரே மாதத்தில் உங்கள் வீட்டு மொட்டை மாடி பசுமையாகிவிடும். தக்காளி, கத்திரி, வெண்டை, முள்ளங்கி, மிளகாய், அவரை, கொத்தவரை, பீன்ஸ், பாகற்காய், நிலக்கடலை, துளசி, ஓமவள்ளி, தூதுவளை, கீரை வகைகளையும் புத்தம் புதுசா பறிச்சிக்கலாம். வாழைமரம் கூட மாடியில் வளர்க்கலாம். இதை ஒரு பாடமாகவே எங்க கல்லூரியில் வைச்சிருக்கோம். எங்ககாலேஜ் மொட்டை மாடியில் மாணவ, மாணவிகளின் முயற்சியால் மாடித்தோட்டம் அமைச்சிருக்கோம். இதை ஒவ்வொருவர் வீட்டிலேயும் கடைபிடித்து தங்களுக்கு தேவையான காய்கறி கீரைகளை விளைவித்து பயன்படுத்த அவர்களை பக்குவப்படுத்தி வருகிறோம்.

நாம பயிரிட்ட செடி கொடிகளை பராமரிப்பதில், மனதுக்கு இனம் புரியாத பரவசம். நாமே விளைவித்தோம் என்ற திருப்தி. பசுமைத் தோட்ட பராமரிப்பால் உடலுக்கும் பயிற்சி. காய்கறிகளுக்கான செலவும் மிச்சம். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். எனவே தான் சொல்கிறேன். நம்ம ஆரோக்கியத்தை மொட்டை மாடியிலிருந்தே துவங்குவோம் என்கிறார் விஜயகுமார்.

Leave a Reply