இந்தியன் ஸ்டைல் சிக்கன் சீசுவான்

உங்களுக்கு சிக்கனை எப்போதும் குழம்பு, கிரேவி, ப்ரை என்று செய்து சுவைத்து அலுத்துவிட்டதா? அப்படியெனில் சற்று வித்தியாசமாக சைனீஸ் ரெசிபியான சிக்கன் சீசுவானை இந்தியன் ஸ்டைலில் செய்து சுவையுங்கள். இது அற்புதமான ஓர் ரெசிபி. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

சரி, இப்போது இந்தியன் ஸ்டைல் சிக்கன் சீசுவானை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.தேவையான பொருட்கள்:

ஊற வைப்பதற்கு…

சிக்கன் – 400 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
சோள மாவு – 2 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
முட்டை – 1
மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – 1 டீஸ்பூன்

கிரேவிக்கு…

வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி-பூண்டு – 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
ஸ்பிரிங் ஆனியன் – 1/4 கப் (நறுக்கியது)
வர மிளகாய் – 10
சோயா சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
வினிகர் – 1 டீஸ்பூன்
சர்க்கரை – 1 டீஸ்பூன்
சிக்கன் ஸ்டாக் (சிக்கன் வேக வைத்த தண்ணீர்) – 1 கப்
சோள மாவு – 1 டேபிள் ஸ்பூன் (நீரில் கரைத்தது)
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக நீரில் கழுவி, ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்கு பிரட்டி 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிக்கனை பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சிக்கன் துண்டுகளைப் போட்டு பொரித்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

பின்பு மற்றொரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, ஸ்பிரிங் ஆனியன் மற்றும் வர மிளகாய் சேர்த்து வதக்கவும்.

பின் அதில் பொரித்து வைத்துள்ள சிக்கன் துண்டுகள், சோயா சாஸ், மிளகுத் தூள், வினிகர், சர்க்கரை, உப்பு மற்றும் சிக்கன் ஸ்டாக் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

கலவை நன்கு கொதிக்கும் போது, அதில் நீரில் கரைத்து வைத்துள்ள சோள மாவை சேர்த்து மீண்டும் நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், இந்தியன் ஸ்டைல் சீசுவான் சிக்கன் ரெடி!!!

Leave a Reply