பனீர்பரோட்டா

இதுவும்  பரோட்டா செய்யத் தெரிந்தவர்களுக்கு மிகவும் சுலபம்தான். ஒரு முறை செய்து பழகிவிட்டால்  பனீர் வீ ட்டில் வாங்கும் போதெல்லாம் செய்யத் தோன்றும்.அலுத்துச் சலித்து பசியோடு வரும் பிள்ளைகளுக்கு  இதைச் செய்து கொடுத்தால்  கொண்டாட்டமாக சாப்பிடுவார்கள். தயிர்,ஊறுகாய், டால் எது இருந்தாலும் ஜோடி சேரும்.

வேண்டியவைகள் —2கப் கோதுமைமாவு,ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய்

பனீர்—-100 கிராம். கடையில் வாங்குவது கிராம் கணக்கில்தானே கொடுக்கிரார்கள்

பச்சைமிளகாய்– ஒன்று அல்லது இரண்டு.  காரத்திற்குத் தகுந்த அளவு.

பச்சைக் கொத்தமல்லி இலை மாத்திரம் சிறிதளவு.

வெங்காயம்–திட்டமான அளவில் ஒன்று.

ருசிக்கு உப்பு,   எண்ணெய் வேண்டிய அளவு.

மாவை எப்போதும் போல  சிறிது எண்ணெய் உப்பு சேர்த்து பிசைந்து  ஊறவைக்கவும். ஸ்டஃப்  செய்யும் பனீர்தான் உங்களுக்குப் புதிது.

பனீரை ஃபிரிஜ்ஜிலிருந்து எடுத்து கொப்பரைத்துருவலில் துருவிக் கொள்ளவும்.அல்லது கையினால் உதிர்த்துக் கொள்ளவும்.  மல்லி இலையை மெல்லியதாக நறுக்கவும்.  மிளகாயை இரண்டாகக் கீறி உள்ளிருக்கும் விதைகளை பூராவும் நீக்கி   மிகவும்   இழைபோல நறுக்கிக் கொள்ளவும்.  வெங்காயத்தையும் உரித்து  கொப்பரைத் துருவலில் துருவவும். நீர்க்க வரும், நம் கண்ணிலும் ஜலம் வரும். வாஸனைக்கு எவ்வளவு கிடைக்கிறதோ அது போதும்.  யாவற்றையும் சேர்த்து பனீரை நன்கு பிசையவும். மிகவும் திட்டமாக உப்பையும் சேர்க்கவும். சீரகப்பொடியோ,துளி மஸாலாப் பொடியோ சேர்க்கலாம்.

அழுத்திப் பிசைந்த  பன்னீரை சிறிது நேரம்  குளிர் பதனப்பெட்டியில் வைத்தாலும் நல்லது. தயாரிப்பதற்கு முன்  பனீரை ஸம அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். பிசைந்த மாவையும் பனீரைவிட சற்றுப் பெரியதாக உருட்டிக் கொள்ளவும்.

மேல்மாவில் ஒற்றி ஒரு சிறிய வட்டம் செய்யவும். லேசாக எண்ணெய் தடவி மேலே  பனீர் பூரணத்தைத் தட்டையான ,ஷேப்பில் வைத்து  விளிம்புகளால் இழுத்து மூடவும். திரும்பவும் மேல்மாவின் உதவியுடன் வட்டமான பரோட்டாவாக இடவும். இப்படியே ஒவ்வொன்றாகத் தயார் செய்து,    தோசைக்கல்லில்  போட்டு எண்ணெயோ,நெய்யோ விட்டு பரோட்டக்களாகச் செய்து எடுக்கவும்.

தயாராகும் பரோட்டாக்கள்

தயாராகும் பரோட்டாக்கள்

அழகான,ருசியான

அழகான,ருசியான

Leave a Reply