விறால் மீன் குழம்பு

ஆட்டுக்கறியை விட மீன் சாப்பிடுவது உடம்புக்கு ரொம்ப நல்லது. ஓமேகா 3 என்ற சத்து மீனில் இருப்பதால் இது இதய நோயளிகளுக்கு ரொம்ப நல்லது. அதனால் வாரத்துக்கு இரண்டு தடவையாவது மீன் சேர்க்கவேண்டும். நிறைய மீன் வகைகள் இருந்தாலும் விறால் மீனுக்கு தனி மவுசுதான்… அதன் குழம்புக்கும் தனி ருசிதான். அந்த வகையில் சுவையான விறால் மீன் குழம்பை அடிக்கடி செஞ்சு குடுத்து அசத்துங்க…..

தேவையான பொருட்கள்:

விறால் மீன் (3/4 கிலோ எடையுள்ளது) – 1
சின்ன வெங்காயம் – 1/4 கிலோ
தக்காளி – 1/4 கிலோ
தேங்காய்ப்பால் – 2 கப்
பூண்டு – 1
கடுகு – 1 டீ ஸ்பூன்
காய்ஞ்ச மிளகாய் – 2
கறிவேப்பிலை – ஒரு கொத்து
வெந்தயம் – ஒரு டீ ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
எண்ணை – ஒரு குழிக்கரண்டி
கொத்துமல்லி – சிறிதளவு

செய்முறை:

* மீனை நல்லாக்கழுவி துண்டுகள் போடுங்க.

* குழம்பு வைக்கும் பாத்திரத்தில் எண்ணைவிட்டு கடுகு, காய்ஞ்ச மிளகாய், வெந்தயம், கறிவேப்பிலை போட்டு வதக்குங்க.

* வெங்காயம் போட்டு நல்லா வதக்கி, பூண்டு சேர்த்து வதக்குங்கள்.

* அப்புறம் பச்சைமிளகாய், தக்காளி சேர்த்து வதக்குங்கள். அதோடு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்து கொத்துமல்லி கறிவேப்பிலை சேர்த்து தேங்காய்ப் பாலை ஊத்துங்க.

* கொதிக்கறப்போ மீன் துண்டுகளைப் போட்டு ஒரு கொதிவிட்டு இறக்குங்க.

குறிப்பு: எப்போதுமே விறால் மீன் வாங்குறப்போ முக்கால் கிலோ அல்லது அதுக்கு மேல எடை இருக்கிற மாதிரி பார்த்து வாங்கணும். அதுக்கு கீழே எடை இருந்தா ருசியாகவே இருக்காது.

Leave a Reply