வெஜிடபிள் சூப்

தேவையான பொருட்கள்:

 • கேரட் – 1
 • உரித்த பச்சை பட்டாணி – சிறிது
 • உதிர்த்த மக்காச்சோளம் – சிறிது
 • தக்காளி – 1 (சிறிய தக்காளி)
 • பூண்டு – 1 பல்
 • செலரி (celery) – பொடியாக நறுக்கியது – சிறிது
 • சீரகத்தூள் – 1/4 டீ ஸ்பூன்
 • மிளகுத்தூள் – 1/4 டீ ஸ்பூன்
 • மஞ்சள்தூள் – 1/4 டீ ஸ்பூன்
 • சிக்கன் பிராத் – 1 கேன்
 • எண்ணெய் – 1/4 டீ ஸ்பூன்
 • உப்பு – தேவையான அளவு
 • கொத்தமல்லி இலை – சிறிது – அலங்கரிக்க
 • பிரென்ஞ்ச் ப்ரைடு ஆனியன்ஸ் – சிறிது (விருப்பமானால்)

செய்முறை:

 • செலரியைக் கழுவி சுத்தம் செய்து, சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டைத் தோல் உரித்து தட்டி நசுக்கிக் கொள்ளவும்.
 • தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கேரட்டை தோல் சீவி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

கோழி இறைச்சி வீட்டில் இருக்கும் சமயத்தில் “சிக்கன் பிராத்” நீங்களாகவே கூடத் தயாரித்து, அதை ரெசிபிகளுக்குப் பயன்படுத்தலாம். அது நல்ல சுவையைத் தரும். (சிக்கன் பிராத் தயாரிக்கும் விபரம் அறிய கீழே பார்க்கவும்.) அப்படி இல்லாத சமயத்தில், இது போல் கேன்டு சிக்கன் பிராத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். தப்பேயில்லை…

  • கேன் ஓப்பனர் வைத்து சிக்கன் பிராத் கேனைத் திறந்து தயாராக வைத்துக் கொள்ளவும்.

சூப்பில் சேர்க்கத் தகுந்த, உங்களுக்குப் பிடித்தமான காய்கறி எதுவானாலும் இந்த சூப்பில் தாராளமாகப் பயன்படுத்தலாம்.

 • பச்சைப் பட்டாணி மற்றும் சோளத்தைக் (corn) கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
 • அடுப்பில் குக்கரை வைத்து, சிறிது எண்ணெய் விட்டுச் சூடேற்றவும்.
 • நறுக்கிய செலரி மற்றும் பூண்டைச் சேர்த்து 2-3 நிமிடங்கள் லேசாக வதக்கவும்.
 • இதனுடன் நறுக்கிய தக்காளியைச் சேர்த்து மேலும் சில நிமிடங்கள் வதக்கி விடவும்.
 • தொடர்ந்து கேரட்,பச்சைப் பட்டாணி,சோளத்தை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
 • இதனுடன் மஞ்சள்தூள், மிளகுத்தூள்,சீரகத்தூள் சேர்த்து வதக்கவும். பின் சிக்கன் பிராத்தைச் சேர்த்து, தேவையான அளவு உப்புப் போட்டுக் கலக்கிவிடவும். குக்கரை மூடி வெயிட் வைக்கவும்.
 • 2-3 விசில் சத்தத்திற்குப் பின் அடுப்பை அணைக்கவும்.
 • மேலே நறுக்கிய கொத்தமல்லி இலைகளைத் தூவி சூப்பினை சூடாகப் பரிமாறவும்.

பிரென்ஞ்ச் ப்ரைடு ஆனியன்ஸ், நெய்/ வெண்ணையில் பொரித்த ரொட்டித்துண்டுகள், குரூட்டான்ஸ்(Croutons), பிரட் துண்டுகள், பிரென்ஞ்ச் பிரட் துண்டுகள் என இவை எவற்றுடனும் இந்த சூப்பைப் பருக இன்னும் சுவையாக இருக்கும்.

என் குழந்தைக்குப் ‘பசி’ என்ற நினைப்பே வராதோ? சாப்பிட இப்படி அடம் பிடிக்கிறானே!! என யோசிக்கும் தாய்மார்கள் இந்த சூப்பினைக் கண்டிப்பாக ட்ரை பண்ணலாம். சூப் குடித்த சிறிது நேரத்திலேயே “இன்னைக்கு சாப்பிட என்ன செய்திருக்கிறீங்க மம்மி..?” என கேட்டுக் கொண்டே டைனிங் டேபிளுக்கு வந்து உட்கார்ந்து கொள்ளும் உங்க வீட்டுச் செல்லக் குட்டி.

குறிப்பு:

இது குளிர்காலத்தில் குடிப்பதற்கு ஏற்ற சூப்.

காரம் விரும்புபவர்கள் தேவைக்கு ஏற்றபடி மிளகின் அளவைக் கூட்டிக் கொள்ளவும்.

மிளகு, மஞ்சள்தூள் சேர்த்து செய்யப்படும் இந்த சூப் சளி, ஜலதோஷத்தால் அவதிப்படுபவர்களுக்கும் ஏற்றது.

செலரிக்குப் பதிலாக சிறிது நறுக்கிய வெங்காயம் சேர்த்தும் செய்யலாம்.

Leave a Reply