உங்களுக்கு தெரியுமா இயற்கை பானமே உடலுக்கு இனியது

நம் நாட்டு பாரம்பரிய உணவு வகைகள் என்றுமே நமக்கு தீங்கு இழைப்பதில்லை என்ற கருத்தை இன்றைய தலைமுறைகள் ஏனோ ஏற்க மறுக்கிறார்கள்.

இயற்கை பானமே உடலுக்கு இனியது
இயற்கை பானமே என்றும் உடலுக்கு இன்னல் விளைவிக்காது என்பதை அனைவரும் ஏற்க வேண்டிய காலகட்டம் இது. இனியும் தாமதித்தால் நாளைய சந்ததிகள் நலம் காண்பார்களா? என்பது சந்தேகம்தான். நம் முன்னோர்கள் இரவில் சமைத்த சாதத்தில் தண்ணீரை ஊற்றி, மறுநாள் அதை கஞ்சியாக சாப்பிட்டு திடகாத்திரமாக வாழ்ந்தவர்கள். இதன் சுவை மற்றவைகளைவிட பின்தங்கி இருக்கலாம். ஆனால், ஆரோக்கியத்தில் அதை அடித்துவிடமுடியாது. இதை நன்கு உணர்ந்த வெளிநாட்டவர்கள்கூட இப்போது அதை தயாரித்து டின்களில் விற்க தொடங்கி இருக்கிறார்கள்.

செயற்கை குளிர்பானத்திற்கு எதிராக இளநீரை போட்டிக்கு வைத்தால் ஆரோக்கியத்தை தரும் தன்மைகள் நிறைய இருப்பது இளநீரே என்று அவற்றை விளைவிக்கும் விவசாயிகளும், மருத்துவர்களும் மார்தட்டி சொல்வார்கள். உடலின் உஷ்ணத்தை குறைக்கவும், வயிற்று பிரச்சினைகள், அஜீரண கோளாறுகளை நீக்கவும், ரத்தத்தை சுத்தப்படுத்தவும், ரத்த அழுத்தத்தை குறைக்கவும், சிறுநீரகத்தில் கற்கள் தங்காமல் இருக்கவும் என இளநீரின் பயன்களை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

அதற்கடுத்து பனை மரத்தில் இருந்து இறக்கப்படும் நுங்கு, பதனீர். உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்த இவைகளை விட்டால் வேறு எதுவும் நிகராக இருக்க முடியாது. இந்த வரிசையில் கம்மங்கூழ், சோளக்கஞ்சி, பழச்சாறுகள் என்று இயற்கை வழியில் தயாராகும் உணவு வகைகள் மனித உடலுக்கு நீண்ட ஆயுளை தரக்கூடியவை.

குறைந்த விலையில் நிறைந்த பயனை தரக்கூடியவை இவை. அதுமட்டுமின்றி பனை மரங்கள், தென்னை மரத்தில் இருந்து தருவிக்கப்படும் நீரா பானம் போன்றவை ஆல்கஹால் என்ற அரக்கன் இல்லாத போதையையும், உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரக்கூடியது. மதுவுக்கு பதிலாக அவற்றை விற்பனைக்கு விடவேண்டும் என்ற கோரிக்கை இன்னும் வலுத்து ஒலித்துக் கொண்டிருக்கிறது.

நம் நாட்டு பாரம்பரிய உணவு வகைகள் என்றுமே நமக்கு தீங்கு இழைப்பதில்லை என்ற கருத்தை இன்றைய தலைமுறைகள் ஏனோ ஏற்க மறுக்கிறார்கள் என்பதுதான் கிராமத்து பெரியவர்கள், விவசாய குடிமக்களின் வேதனையாக இருக்கிறது. இயற்கை பானங்களுக்கு முக்கியத்துவம் அளிப்போம், பனை, தென்னை விவசாயத்தை பாதுகாப்போம்.

Leave a Reply