தக்காளி, வெங்காயம் இல்லாமல் சமைக்கலாம் வாங்க!

கடந்த சில மாதங்களாக விலையேற்றத்தில் இருந்த தக்காளி இப்போது, நூறு ரூபாய்க்கும் மேல் கிடுகிடுவென போய்க்கொண்டிருக்கிறது. விலையேறிய வெங்காயம் தற்போது சற்று விலை கம்மியாக கிடைக்கிறது. நம் சமையலில் தக்காளிக்கு எப்போதும் முக்கிய இடமுண்டு. பல வகையான உணவுகளில் தக்காளியும், வெங்காயமும் இடம்பெறாமல் இருக்காது. ஆனால், தக்காளியின் இந்த விலையேற்றத்தில் என்ன சமைப்பது, எப்படிச் சமாளிப்பது எனப் பெண்கள் திகைத்துப் போயிருக்கிறார்கள். தினமும் செய்யும் உணவு வகைகளில் தக்காளிக்குப் பதிலாக என்னென்ன சேர்க்கலாம் என்பது பற்றி சமையல் கலை நிபுணர் ஆதிரை வேணுகோபால் கொடுக்கும் டிப்ஸ் உங்களுக்காக…

* நிறையப் பேருக்கு தக்காளி சேர்க்காத சாப்பாடு உள்ளே இறங்காது. தக்காளி, வெங்காயம் சேர்க்காமலே சுவையான குழம்பு வகைகள் செய்ய முடியும். பலர் வீடுகளில் ஒருநாள் விட்டு ஒருநாளாவது சாம்பார் நிச்சயம் இடம்பெறும். சாம்பாரில் தக்காளியைப் போடுவதற்குப் பதில், புளிப்புச் சுவைக்காக புளி அல்லது மாங்காய் சேர்க்கலாம். மாங்காய்த் துண்டு சாம்பாருக்குச் சுவையையும் மணத்தையும் கூட்டும். புளிப்பு சுவையையும் கொடுக்கும்.

* உருளைக்கிழங்கு குழம்புக்குத் தக்காளிச் சேர்க்காமல் செய்யலாம். முந்திரி, திராட்சை, சர்க்கரை போன்றவற்றை சிறிதளவு சேர்த்து, புளிப்பு சுவைக்காக எலுமிச்சைச் சாற்றை ஒரு டேபிள்ஸ்பூன் சேர்க்கலாம். இதனுடன் உப்பு, மிளகுத்தூள் சேர்த்துச் செய்யும்போது, அலாதியான சுவையைத் தரும்.

* வெங்காயம் சேர்க்கும் இடங்களில் எல்லாம் முட்டைகோஸை பொடியாக நறுக்கி சேர்த்து தாளிக்கலாம். முட்டை பொடிமாஸில் கூட வெங்காயத்துக்குப் பதில் முட்டைகோஸ் சேர்க்கலாம். அருமையான சுவையில் அசத்தும்.

* உருளைக்கிழங்கு குருமாவையும் தக்காளி இல்லாமல் செய்யமுடியும் என்றால் நம்புகிறீர்களா..? முடியும்.. சுருக்கமாகச் சொல்கிறேன். தேவையான அளவு உருளைக்கிழங்கோடு, ஒரு கேரட், ஒரு கப் தேங்காய்த் துருவல், பச்சைமிளகாய் எல்லாம் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். தக்காளிக்குப் பதில் புளிக்காத தயிர் ஒரு கப், அரை கப் பால், தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் சேர்த்து தாளித்துவிட்டால், பக்கத்து வீடு வரை வாசம் பறக்கும்.

தக்காளி

* தக்காளி விலை ஏற்றத்தைச் சமாளிக்க தினம் ஒரு துவையலைச் செய்யலாம். எள்ளுத் துவையல் செய்வது ரொம்ப ஈஸி. தேவையான அளவு எள், காரத்துக்குக் காய்ந்த மிளகாய், சின்ன நெல்லிக்காய் அளவுக்குப் புளியைச் சேர்த்து அரைத்தால், அருமையான எள்ளுத் துவையல் ரெடி!

* சிலர் அவியல் பிரியர்களாக இருப்பார்கள். அவியலைப் பொருத்தவரை பீன்ஸ், கேரட், வாழைக்காய், மாங்காய் என எத்தனை காய் எடுத்துக்கொண்டாலும், சுண்டு விரல் அளவுக்கு ஒரே அளவில் நறுக்கிக்கொண்டு அவியலுக்குத் தேவையான பொருள்களைச் சேர்க்கவும். கெட்டித் தயிர் ஒன்றரை கப், கடைசியாக ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விடுங்கள். துவையல் தயார். இதன் சுவையில் அடுத்தமுறை தக்காளியைத் தேடமாட்டீங்க.

வெங்காயம்

* தக்காளியைத் தவிர்த்து சுவையான தால் செய்யலாம். கீரையுடன் கடலைப் பருப்புச் சேர்த்து பெரும்பாலானோர் தால் செய்வார்கள். இதற்குத் தக்காளி சேர்க்க வேண்டியதில்லை.

* மேற்சொன்னதுபோல திராட்சை தொக்கு, எள்ளுத் துவையல் போன்று பல வகை ரெசிப்பிகளைச் செய்யலாம். தொக்கு, துவையல், குருமா இருந்தால்… தயிர் சாதம், சப்பாத்தி, பூரி என எல்லாவற்றுக்கும் செட்டாகும். கேரளாவில் பெரும்பாலானோர் தக்காளி, வெங்காயம் சேர்க்காமலே அவ்வளவு அருமையாக டிஷ் செய்வார்கள்.

* தக்காளிக்குப் பதில் ஒவ்வொரு சமையலையும் பொருத்து… தயிர், எலுமிச்சைச் சாறு, புளி, மாங்காய் போன்ற புளிப்பு வகைகளைச் சேர்க்கலாம். அதிக புளிப்பாகத் தெரிந்தால், சிறிது வெல்லம் சேர்க்கவும். சுவை இன்னும் கூடும். இனி, தக்காளி விலையேற்றம் கவலையை விடுங்கள், வெரைட்டியாக செய்து சாப்பிடுங்கள்!

தக்காளி விலையேறுகிறதே என்கிற கவலையை விடுங்கள்… இங்கே சொல்லியிருக்கும்படி சமையல் செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள்.

Leave a Reply