காய்கறிகள் சேர்த்த பொரிச்ச குழம்பு

வீட்டிற்கு திடீரென விருந்தாளி வந்து விட்டால் இந்த பொரிச்ச குழம்பை விரைவில் செய்து அசத்தலாம். இப்போது இந்த குழம்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

காய்கறிகள் சேர்த்த பொரிச்ச குழம்பு
தேவையான பொருட்கள் :

காய்கறிகள் (கேரட், பீன்ஸ், புடலங்காய், உருளைக்கிழங்கு) – 1/4 கிலோ,
பாசிப்பருப்பு – 1 கப்,
புளி – சிறிது,
மஞ்சள் தூள், பெருங்காயம் – 1/4 டீஸ்பூன்,
தேங்காய்த் துருவல் – 4 டீஸ்பூன்,
எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை, உப்பு – தேவைக்கு.

அரைக்க…

உளுந்தம்பருப்பு – 2 டீஸ்பூன்,
துவரம்பருப்பு – 2 டீஸ்பூன்,
மிளகு – 1/2 டீஸ்பூன்,
காய்ந்தமிளகாய் – 3

செய்முறை :

* கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வாசனை வரும் வரை நன்றாக வறுத்து ஆற வைத்து மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

* புளியை சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்.

* பாசிப்பருப்பை வேகவைத்து கடைந்து கொள்ளவும்.

* கொத்தமல்லி, காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் அனைத்து காய்கறிகளையும் போட்டு நன்கு வதக்கவும்.

* காய்கறிகள் நன்றாக வெந்ததும் அதில் கடைந்த பருப்பை ஊற்றவும்.

* அடுத்து அதில் மஞ்சள் தூள், பெருங்காயம் சேர்த்து, உப்பு, புளிக்கரைசல் ஊற்றவும்.

* எல்லாம் சேர்ந்து வரும் போது அரைத்த பொடியை 2 அல்லது 3 டீஸ்பூன் போடவும்.

* மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, தேங்காய்த் துருவல் சேர்த்து சிவக்க வறுத்து காய்கறிகள் கலவையில் கொட்டி கலக்கவும்.

* கடைசியாக கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கி பரிமாறவும்.

Leave a Reply